
புதுடெல்லி, மே 29- தீ விபத்தின் போது எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந் வர்மா. டெல்லியில் இவர் வசித்த அரசு குடியிருப்பின் வளாகத்தில் பொருட்கள் வைக்கும் அறையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு படையினர் அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் இருப்பதை கண்டறிந்து மீட்டனர். இது குறித்த தகவல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் கிடையாது என நீதிபதி யஷ்வந்த வர்மா கூறினார். இது குறித்து உள் விசாரைணைக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதன் அறிக்கை விவரம் வெளியிடப்படவில்லை.
நீதிபதி யஷ்வந்த வர்மாவை ராஜினாமா செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வலியுறுத்தினார். ஆனால், நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அப்போதை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடிதம் எழுதினார். அதோடு நீதபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றம்சாட்டி விசாரணை குழு அளித்த அறிக்கையையும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதி யஷ்வ்ந்த வர்மா பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கவில்லை. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளது. யஷ்வ்ந்த வர்மா மீது பதவு நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு முன்பாக, இது குறித்து எதிர்க்கட்சிகளிடம் ஆலோசித்து அதன் நம்பிக்கையை பெற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. வெளிப்படையான ஊழலை புறக்கணிப்பது சிரமம் என்பதால், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மான நடவடிக்கை குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர மாநிலங்களவையில் குறைந்த 50 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும். மக்களவையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.