பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

டெல்லி, ஜூலை 4- காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறை குளிர் காலம் வரும்போதெல்லாம் டெல்லி கடுமையான காற்று மாசை எதிர்கொண்டு வருகிறது. வாகன புகை இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே வாகன புகையை கட்டுப்படுத்த புதிய நடைமுறையை டெல்லி பாஜக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை விதிக்கப்பட்டது. காற்று தர மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு ஜூலை.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி டெல்லியில் உள்ள 498 பெட்ரோல், டீசல் பங்குகளில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராக்கள், 10, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அடையாளம் கண்டு பெட்ரோல் போடுபவர்களுக்கு தகவல் கொடுக்கும். இதன் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் கொடுக்கப்படும் அல்லது மறுக்கப்படும். இந்த முடிவால் டெல்லியின் சுமார் 62 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. காற்று மாசு காரணங்களில் 50% பழைய வாகனங்கள்தான் இருக்கின்றன. எனவேதான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக டெல்லி பாஜக அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் சில டெக்னிக்கல் பிரச்சனையும் இருந்தது.