பெங்களூரு, டிசம்பர் 21-
பாஜக யுவமோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கொடாஜே முகமது ஷெரீப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) மாநில செயற்குழு உறுப்பினரும் ஆவார்.
பஹ்ரைனில் இருந்து புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது லுக்அவுட் நோட்டீஸின் கீழ் இருந்த குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
பி எஃப் ஐ அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், அந்த அமைப்பின் வெளி சேவைக் குழுவின் தலைவராக இருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் சேர்ந்து, மிட்டூரில் உள்ள சுதந்திர சமூக மண்டபத்தில் அணி உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தனர். மாநில செயற்குழுவில் விவாதத்திற்குப் பிறகு பிரவீன் நெட்டாருவைக் கொல்ல உத்தரவிட முகமது ஷெரீப் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.அவரது அறிவுறுத்தலின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட முஸ்தபா பைச்சர் மற்றும் அவரது குழு பிரவீன் நெட்டாருவை கொடூரமாக கொல்லப்பட்டனர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 26, 2022 அன்று, தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுல்யா தாலுக்காவின் பெல்லாரே கிராமத்தில் பாஜக யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாரு பி எஃப் ஐ செயல்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் கொல்லப்பட்டார். வழக்கின் தீவிரத்தை உணர்ந்த என்ஐஏ ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணையை மேற்கொண்டது. இதுவரை தலைமறைவாக உள்ள 3 பேர் மற்றும் கைது செய்யப்பட்ட 20 பேர் உட்பட 23 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.