
பெங்களூரு, ஜூலை –
பெங்களூர் நகரின் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்த் மற்றும் டி.சி.பி. சேகர் எச். தேக்கண்ணவர் ஆகியோரின் இடைநீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் போபலியானார்கள். மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். கொண்டாட்டத்திற்கு முன்பு ஆர்சி பி அணி நிர்வாகம் போலீசாரிடம் எந்த முன் அனுமதியையும் பெறவில்லை என்று உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொண்டாட்டம் திடீரென சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அது சுட்டிக்காட்டியது. ஆர்சிபி வெற்றி அணிவகுப்புக்கான அழைப்பிதழ் காவல்துறை அனுமதியின்றி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, இதனால் ஒரு பெரிய கூட்டம் கூடியது.எல்லாவற்றையும் தயார் செய்ய போலீசாருக்கு போதுமான நேரம் இல்லை. காவல்துறையினர் வெறும் 12 மணி நேரத்தில் முழுமையான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமார் அவர்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. தீர்ப்பாயம் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து, அவரது இடைநீக்க காலத்தை அவரது பணியின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்று கூறி உள்ளது இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, விகாஸ் குமார் பெங்களூரு மேற்கு மண்டலத்தின் கூடுதல் ஆணையராகவும், சின்னசாமி மைதானத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.