மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்;மோகன் பாகவத்

சென்னை: ஜூலை 10 –
‘மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த,
அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து, மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்,
ஆப்பரேஷன் சிந்துார், நீடிக்கும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நுாற்றாண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை கிராமங்கள், வார்டுகள் அளவில் கொண்டுச் செல்ல, நாடெங்கும் 58,964 ஒன்றியங்கள், 44,055 நகரப் பகுதிகளில், ஹிந்து மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.