
ஆமதாபாத், ஜூன் 20- தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில், சமூக வலைத்தள பெண் பிரபலம் கீர்த்தி படேலை போலீசார் கைது செய்தனர்.குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கீர்த்தி படேல். இவர் சமூகவலைதள பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன் ‘டிக் டாக்’ செயலில் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, மற்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இவரை 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் வீடியோ வெளியிட்ட மறுநொடியே ஏராளமானோர் பார்த்து விட்டு, கமென்ட் போட ஆரம்பித்து விடுவார்கள். காலபோக்கில் இவரது பாதை வழி மாறியது. இவர் ஆபாச வீடியோக்கள் அனுப்பி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டார். இவரது மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில், தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்தது தொடர்பாக, சூரத்தில் உள்ள கபோதரா போலீஸ் ஸ்டேஷனில், கீர்த்தி படேல் மற்றும் இவரது கூட்டாளிகள் ஆறு பேர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.