லக்னோ பவுலர் செய்த ஏமாற்று வேலை.. கொந்தளித்த கோலி

லக்னோ, மே 28- 2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் செய்த மன்கட் முயற்சியால் விராட் கோலி கோபமடைந்து, தனது கையில் இருந்த பாட்டிலை தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதுவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி ஆகும்.
இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது. 228 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வந்தது.
ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் வந்த பெங்களூர் அணி, கடைசி நான்கு ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அப்போது 17வது ஓவரை திக்வேஷ் ரதி வீசினார்.
அந்த ஓவரின் கடைசிப் பந்தை அவர் வீசும்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா, பந்து வீசும் முன் க்ரீஸை விட்டு வெளியே சென்றார்.
இதை எதிர்பார்த்திருந்த திக்வேஷ் ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
ஜிதேஷ் சர்மா க்ரீஸை விட்டு வெளியேறும் வரை சில வினாடிகள் மெதுவாக ஓடிச் சென்று, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பின்னர் நடுவரிடம் அவுட் கேட்டார்.
மூன்றாவது நடுவர் சரிபார்த்தபோது,
திக்வேஷ் ரதி பந்து வீசி முடிக்கும் நிலையில் தான் மன்கட் செய்திருந்தார். விதிப்படி இது அவுட் இல்லை என நடுவர் அறிவித்தார்.