சென்னை: டிசம்பர் 6
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது மெல்ல நகர்ந்து, தமிழகத்தை ஒட்டிய பகுதிக்கு வரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த வாரம் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றிருந்தது. கடந்த வாரம் மரக்காணத்தை ஒட்டிய பகுதியில் இந்த புயல் கரையை கடந்த நிலையில், வட கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள்
ஏற்பட்டன. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்திருந்தது. வழக்கமாக 20 செ.மீக்கு அதிகமாக மழை பதிவானால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்படும். ஆனால் விழுப்புரத்தில் 50 செ.மீக்கும் அதிகமான மழை பெய்திருந்தது.
இதனால் அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் 3 அடி உயரத்திற்கு வெள்ளமாக தேங்கி நின்றது. எனவே, இந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ரயில் போக்குவரத்தும் மழை காரணமாக தடைபட்டிருந்தது. தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வர வேண்டிய ரயில்கள், காட்பாடி,
அரக்கோணம் வழியாக திருப்பிவிடப்பட்டன. ஏறத்தாழ இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் மீட்பு பணிகள் முழுமையடையவில்லை. பலரும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் குறையவில்லை. எனவே 9வது நாளாக இன்றும் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரத்துடன், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களையும் புயல் மழை பதம் பாரத்து இருப்பதால், இம்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக வேளாண் மற்றும்
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு நிதி உதவியை அறிவித்திருக்கிறது. அதேநேரம் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.