ஷுப்மன் கில் சதம்: முதல் நாளில் 310 ரன்கள் எடுத்தது இந்தியா

பர்மிங்காம், ஜூலை 3. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் சதம் பதிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். அதேவேளையில் சாய் சுதர்சன், ஷர்துல் தாக்குர் ஆகியோர் நீக்கப்பட்டு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரன்கள் சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சிறந்த நீளத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை கே.எல்.ராகுல் தாமதமாக தடுத்து விளையாட முயன்றார்.
ஆனால் பந்து மட்டையில் பட்டு ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதையடுத்து களமிறங்கிய கருண் நாயர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் தனது 11-வது அரை சதத்தை கடந்தார். சீராக ரன்கள் சேர்த்து வந்த கருண் நாயர் 50 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய ஷார்ட் பாலை கால்கள் நகர்வு இன்றி கருண் நாயர் விளையாடினார். இதனால் பந்து மட்டையில் பட்டு 2-வது சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் எளிதாக கேட்ச் ஆனது. 2-வது விக்கெட்டுக்கு கருண் நாயர், ஜெய்ஸ்வால் ஜோடி 80 ரன்கள் சேர்த்தது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது.
ஜெய்ஸ்வால் 62, கேப்டன் ஷுப்மன் கில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். அற்புதமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே அகலமாக வீசிய பந்தை ஜெய்ஸ்வால் கால்களை நகர்த்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே கட் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் ஆனது.