
மும்பை: ஜனவரி 29-
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, அவரிடம் இருந்தே கைப்பற்றிய அஜித் பவார், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதி பகுதியில் நடைபெற இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள தனி விமானத்தில் சென்றார். வி.எஸ்.ஆர். நிறுவனத்துக்கு சொந்தமான லியர்ஜெட் 45′ என்ற சிறிய ரக விமானத்தில் அவர் நேற்று காலை 8.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டார். புறப்பட்ட 15 நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டையே இந்த விமான விபத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிரா மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதி சோகத்தில் மூழ்கியது. அஜித் பவாரின் மறைவை ஒட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
விமான விபத்தில் உடல்கள் சிதறியதால், அவரது கைக்கடிகாரத்தை வைத்தே உடல் அடையாளம் காணப்பட்டது. அஜித் பவார் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வந்தனர். தொடர்ந்து அவரது இல்லத்தில் இருந்து அஜித் பவார் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று பாஜக தலைவர் நிதின் நபின், நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத்பவார், ஏக்னாத் ஷிண்டே உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.















