அஜித் பவார் மரணத்தில் சதிச்செயல் இருக்கா? துயரத்தில் வாடும் சரத் பவார்

மும்பை: ஜனவரி 29
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில் இதனை சரத்பவார் மறுத்துள்ளார்.
அஜித் பவார் உயிரிழந்தது விபத்து தான்.. இதில் அரசியலை கொண்டு வரவேண்டாம் என்றும் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக சிறிய ரக விமானத்தில் சென்ற அவர் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மட்டும் இன்றி நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அஜித் பவார் மரணத்தில் அரசியல் இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அதிர வைத்தார்.
இவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சித் தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவார் இதனை மறுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், அஜித் பவாரின் மரணம் மகாராஷ்டிராவுக்கு பெரிய அதிர்ச்சி. கடினமாக உழைக்கும் மற்றும் திறமையான ஒரு தலைவரை மகாராஷ்டிரா இழந்துவிட்டது.
அஜித் பவாரின் இழப்பினை ஈடு செய்ய முடியாது. எல்லாம் நம் கைகளில் இல்லை. இந்த சம்பவத்தில் ஏதோ அரசியல் சம்பந்தப்பட்டு இருப்பதாக கொல்கத்தாவில் இருந்து ஒரு கருத்து பரப்பப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இதில் அரசியல் எதுவும் இல்லை.
இது ஒரு விபத்து. இதில் அரசியலை கொண்டு வரவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.