Home செய்திகள் தேசிய செய்திகள் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு

மிர்சாபூர்: ஏப்ரல் 23-
உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா பகுதியை நோக்கி செல்லும் சாலையில், சரக்குகளை ஏற்றிய லாரி ஒன்று நேற்றிரவு 8:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சிக்கியது. மூன்று வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி சாலையின் நடுவே விழுந்ததில், அந்த வழியாக வந்த மற்றொரு காரும் மோதியது. அடுத்தடுத்து மோதியதில், நான்கு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியே புகைமண்டலமானது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். அது முடியாத நிலையில், இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பின், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் சிக்கிய 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தால், சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில், இரண்டாவதாக சென்ற லாரியின் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பீஹார் பதிவெண்ணும், மற்றொரு லாரி மத்திய பிரதேசத்தின் பதிவெண்ணும் கொண்டுள்ளன. கார்கள் இரண்டும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.