
கொல்கத்தா: ஏப்ரல் 23-
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 23) வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இதை கருத்தில் கொண்டு முதல்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்தி கிராம் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.


















