
சென்னை: ஏப்ரல் 21-
தமிழகத்தில் நேற்று நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரம் சென்னையை பொறுத்தவரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசெளகரியம் ஏற்படலாம் என கூறியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மதிய நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. அதே சமயம் தென் தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் நெல்லையில் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. இன்று காலையிலும் குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயலசீமா மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) சுமார் 1.5 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதனால் இன்று 21-04-2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பலத்த காற்றுடன் மழை வெளுக்கும் 22-04-2026 மற்றும் 23-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


















