அணு ஆயுத சோதனை: அதிபர் டிரம்ப் கூறுவது இதுதான்

வாஷிங்டன், நவ. 1- அமெரிக்கா அணு ஆயுதங்களை சோதிக்குமா? என்ற கேள்விக்கு, ‘’ உங்களுக்கு மிக விரைவில் தெரியவரும்’’ என அதிபர் டிரம்ப் பதில் அளித்தார். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்து இருந்தது. ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க துவங்குமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இம்முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை துாண்டிவிடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அமெரிக்கா நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதா என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்து மறுத்துவிட்டார்.