
திருவண்ணாமலை: ஜனவரி 28-
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பலரும் கிரிவலம் செல்வது வழக்கம். அதேநேரம், கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதிப்பார்கள். மற்ற நாட்களில் வனத்துறை அனுமதியின்றி செல்ல முடியாது. இந்நிலையில் தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பின்புறம் அண்ணாமலையார் மலை (அருணாச்சலம்) ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பஞ்சபூதத் தலங்களில் இது நெருப்பைக் (அக்னி) குறிக்கும் தலம். சிவபெருமான் இங்கே ஜோதி வடிவாக நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே “யார் பெரியவர்?” என்ற போட்டி வந்தபோது, சிவன் அடிமுடி காண முடியாத பெரும் நெருப்புப் பிழம்பாக நின்ற இடமே இம்மலை என்று கூறுவார்கள்.இங்கு அண்ணாமலையார் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. இதனால்தான் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மலையைச் சுற்றி கிரிவலம் வருகிறார்கள்.
“அண்ணாமலையைத் தொழுதாலே முக்தி” என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.மலையைச் சுற்றியுள்ள பாதை சுமார் 14 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கிரிவலப் பாதையில் எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம்,வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை 2,668 அடி உயரமுள்ளது. பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் செல்கிறார்கள். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.















