
புதுடெல்லி, ஜூன் 5- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியானது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்ணாமலையை சமரசம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசிவிட்டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக மக்களிடம் உரையாட உள்ளதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.



















