அதானிக்கு முன்பு பாலிவுட்டை குறிவைத்த ஹிண்டன்பர்க்

நியூயார்க், ஜன. 18- அதானி குழுமத்துக்கு முன்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பாலிவுட்டை குறிவைத்து சூழ்ச்சி வலை பின்னியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்ந்தவர் நாதன் ஆண்டர்சன் (40). அங்குள்ள யூத பள்ளியில் பயின்ற அவர், கனெடிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு குடிபெயர்ந்த அவர் கடந்த 2004, 2005-ம் ஆண்டுகளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றினார்.பின்னர் அமெரிக்காவின் கனெடிகட் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் நாதன் ஆண்டர்சன் பணியில் சேர்ந்தார். அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்த நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் குறித்தும் அவர்களின் நிறுவனங்கள் குறித்தும் எதிர்மறையான ஆய்வறிக்கைகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த பெர்சிங் கோல்டு, ஓபிகேஓ ஹெல்த், ரயட் பிளாக்செயின், கடந்த 2018-ம் ஆண்டில் கனடாவை சேர்ந்த அப்ரியா, கடந்த 2019-ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த புளூம் எனர்ஜி, கடந்த 2020-ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த எச்எப் புட்ஸ், நிகோலா, கடந்த 2022-ம் ஆண்டில் ட்விட்டர், கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் எதிர்மறையான ஆய்வறிக்கைகளை வெளியிட்டது. இதன்காரணமாக இந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டால் அதானி குழுமத்துக்கு மட்டும் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
மேலும் இந்திய பங்குச்சந்தை வாரிய (செபி) தலைவர் மாதவி புரி, அவருடைய கணவர் மீதும் அந்த நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதானி குழுமத்தை குறிவைப்பதற்கு முன்பாக இந்தி திரையுலமான பாலிவுட்டை சீர்குலைக்க ஹிண்டன்பர்க் சூழ்ச்சி வலை பின்னியது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டில் தனது முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் மீண்டும் அதே ஈரோஸ் நிறுவனம் குறித்து எதிர்மறையான ஆய்வறிக்கையை வெளியிட்டது.