புதுடெல்லி, டிச. 3: அதானி ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அதானி மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இண்டியா கூட்டணி கட்சிகள் வலியறுத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் இது குறித்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில், அதானி மீது நடவடிக்கை மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி கட்சி
எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி. மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி, ஆ.ராசா எம்.பி. உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதானி முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.