
ராமநாதபுரம்: டிசம்பர் 6-
ராமநாதபுரத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் கார் மீது கீழக்கரை திமுக நகர்மன்ற தலைவரின் கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ராவ் 55, அப்பாரோ நாயுடு 40, பண்டார சந்திரராவ் 42, கீழக்கரை நகர் மன்ற தலைவரின் கார் ஓட்டுநர் முஸ்டாக் அகமது 30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு கீழக்கரை போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆந்திராவை சேர்ந்த ராமர் 45, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. கீழக்கரை திமுக ஓட்டுனர் அணி நகர துணை அமைப்பாளர் அசரத் அலி 28, என்பவர் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

















