சார்ஜா, செப்டம்பர் 8- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஹாங்காங் மற்றும் யூஏஇ ஆகிய அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தான் அணி யுஏஇ- யில் முகாமிட்டு முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றின் விளையாடுகிறது. இதில் யு ஏ இ, ஆப்கானிஸ்தான் அணிகள் பாகிஸ்தான் உடன் பங்கேற்றனர். இந்த தொடரில் பாகிஸ்தான அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இறுதி போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 141 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அணி 66 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்தத் தொடர் பாகிஸ்தான் வீரர்களுக்கு நல்ல உத்வேகத்தை தந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, இந்த ஆடுகளத்தில் 130 முதல் 140 ரன்கள் எடுப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த இலக்கை எட்டி விட்டோம் என்றால் நிச்சயம் அதனை ஷேஸ் செய்வது என்பது கடினமாக இருக்கும். நவாஸ் அணிக்கு திரும்பியதிலிருந்து அவர் அபாரமாக செயல்படுகிறார். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் அவர் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. ஒரு கேப்டனாக எனக்கு நெருக்கடியான சூழ்நிலையில் அவரை நான் எப்போதும் சார்ந்து இருக்கலாம். பலரும் எங்களிடம், ஏன் நீங்கள் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் களம் எவ்வாறு இருக்கிறது? அதற்கு ஏற்ற வகையில் தான் அணியை தேர்வு செய்வோம். இன்று எங்களுடைய யுத்தி சிறப்பாக செயல்பட்டது. தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு என்ன மாதிரி தயாராக வேண்டும் என்று நினைத்தமோ, அதே போல் தயாராக இருக்கின்றோம். வங்கதேச தொடரிலிருந்து நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றோம். தற்போது எங்களுடைய அணி அனைத்து விதத்திலும் நன்றாக செயல்படுகிறது.ஆசிய கோப்பை தொடருக்கு நாங்கள் முழுமையான முறையில் தயாராகி விட்டோம் என்று சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். தற்போது யுஏஇ ஆடுகளம் தோய்வாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நிலையில் இங்கு பாகிஸ்தான அணி இந்த முத்தரப்பு தொடரில் விளையாடி நல்ல பயிற்சியை பெற்றிருப்பதால்,அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக கருதப்படுகிறது.




















