
திருமலை: மே 23-
கோடை விடுமுறை முடியவிருக்கும் நிலையில், திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களை ரத்து செய்து, அந்த நேரத்தையும் சாமானிய பக்தர்களுக்கு தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது.
என்றாலும் கடந்த 4 நாட்களாக பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. தற்போது சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி நேற்று திருமலையில் கூறியதாவது:
ஏஐ கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து 7 மணி முதல் 8 மணி நேரத்துக்குள் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்கிறோம். இதன் மூலம் தினமும் 15,000 கூடுதல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர்.முதல்முறையாக சாதாரண நாளான கடந்த வியாழக்கிழமை 79,603 பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இது ஒரு சாதனை அளவாகும். இதில் அபிஷேக நேரத்திலும் 5,850 சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வெங்கைய்ய சவுத்ரி கூறினார்.


















