
புதுடெல்லி: அக்.15-
கலாம் கண்ட கனவை, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து நாட்டுக்கு கலாம் ஆற்றிய பங்களிப்பை போற்றி வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடியும் கலாம் பிறந்த நாளில் அவரின் வலிமையான இந்தியா என்ற கனவை கட்டி எழுப்புவோம் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். இளைய தலைமுறையினரின் மனங்களைத் தூண்டி, பெரிய கனவு காணவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை தூண்டியவராக அவர் நினைவு கூரப்படுகிறார்.
வெற்றிக்கு பணிவும், கடின உழைப்புமே மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட கனவான வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் மனிதநேயமிக்க இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.















