புதுடில்லி, நவ. 6- சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. புதிய அறிக்கை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக வைத்து, எப்.ஏ.டி.எப்., அமைப்பு செயல் படுகிறது. ‘சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்’ என்ற பெயரில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அந்த அமைப்பு, சொத்துக்களை பறிமுதல் செய்வதில், நம் நாட்டின் அமலாக்கத்துறை உலகளவில் முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் பாராட்டி உள்ளது.















