அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நவராத்திரி கொலு

கலிபோர்னியா: செப்.30- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மான்டேகா நகரில் ஒன் இந்தியா தமிழின் தீவிர வாசகரும் தமிழருமான ராஜி கோவிந்தராஜனின் வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவுக்கு 150-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து விழாவை சிறப்பித்தனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முடிந்தவுடன் அடுத்த நாளே நவராத்திரி தொடங்கும். இந்த 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தெய்வங்களை போற்றும் வகையில் தலா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அதாவது மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க 9 நாட்கள் கொலு வைத்து போரிட்டு 10 ஆம் நாள் வென்றார். அது முதல் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்பட்டாள். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி (நாளை) ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது. அம்பிகையை கொண்டாடும் வகையில் வழக்கம் இருக்கும் வீடுகளில் இந்த கொலு ஆண்டுதோறும் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் நமது தமிழ் ஒன் இந்தியா வாசகர் ராஜி கோவிந்தராஜன், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மான்டேகாவில் வசித்து வந்தாலும் ஆண்டுதோறும் கொலு வைக்கும் பழக்கத்தை தவறாமல் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து அவர் கொலு வைத்து வருகிறார்.
இந்த ஆண்டு 7 படிகளில் அவர் கொலு வைத்துள்ளார். அதில் அழகான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் தசாவதாரம் எனும் மையப்பொருளை வைத்து அவர் வைத்திருக்கும் கொலுவை பார்த்தால் அப்படியே தசாவாரத்தை தத்ரூபமாக நேரில் பார்த்தது போல் இருக்கிறது.
அது போல் துர்க்கை, சரஸ்வதி, அஷ்டலட்சுமிகளையும் தனது கொலுவில் அவர் வைத்துள்ளார். அது போல் ராமர் சீதை, கைலாயத்தில் சிவன் இருப்பது போன்று விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும் வைத்துள்ளார். இந்த விழாவுக்கு அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். அப்போது அங்கு வீணை வாசிக்கப்பட்டது. குழந்தைகள் நடனமாடினார்கள்.அது போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பாடல்களை பாடினர். அமெரிக்காவில் உள்ள மக்களுக்கும் தமிழ் கலாச்சாரத்தை புகுத்திய இந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் இருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுக்கப்பட்டு விழா முடிந்தது.