வாஷிங்டன்: ஆகஸ்ட் 4
அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, தங்கள் நாடும் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள அவகாசம் தரும் வகையில், வரி விதிப்பை, 90 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
இதனால், ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்த வரி விதிப்பு, வரும் ௭-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்தியா — அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என, சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு, இம்மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இது, அமெரிக்காவுடன் நல்லுறவை தொடர விரும்பும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி ரகங்களில், 28 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய ஜவுளிகளுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். அதேபோல, மருந்து பொருட்கள், அரிசி, மளிகை, வைரம், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் அமெரிக்காவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பால், இந்தப் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் கடந்த, 2024 – 25ம் நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, 7.35 லட்சம் கோடி ரூபாயாகும். இது, மற்ற நாடுகளுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாகும். அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள், 3.88 லட்சம் கோடி ரூபாய்.
.



















