புதுடெல்லி, ஆகஸ்ட் 2- அசைவ பால் மற்றும் மரபணு மாற்ற தானிய விவகாரங்களால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும் அமெரிக்க தரப்பில் பிரென்டனும் கடந்த 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று முன்தினம் கூறும்போது, “நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று விளக்கம் அளித்தார். ந்தியாவின் வியூகம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கண், காது, மூளை என்று வர்ணிக்கப்படும் அரசியல் வியூக நிபுணர் ஜேசன் மில்லர் கடந்த மே மாதம் இந்தியாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்காக அவர் பணியாற்றி வருகிறார். மேலும் அமெரிக்க அரசின் மிக முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். அந்த நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியினர் பதவி வகிக்கின்றனர். அமெரிக்க அரசியலில், யூதர்களுக்கு இணையாக இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
















