
டெல் அவிவ்: அக்டோபர் 11-
பிரதமர் மோடியுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தினார்.
இஸ்ரேல் – காசா அமைதி திட்டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்தார். இது தொடர்பாக எகிப்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி உயிரோடு இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். இறந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும். இந்த காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் கூட்டினார்.அந்த நேரத்தில் பிரதமர் மோடியிடம் இருந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு போன் அழைப்பு வந்தது. பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நெதன்யாகு நிறுத்தினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவலில், ‘‘எனது நண்பர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் போனில் பேசினேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டுவந்த காசா அமைதி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். தீவிரவாதத்தை எந்த உருவிலும், உலகில் எங்கு நடந்தாலும் ஏற்க முடியாது’’ என கூறியுள்ளார்.இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘பிரதமர் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடியுடன் பேசினார். பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கு பிரதமர் நெதன்யாகுவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்’’ என தெரிவித்துள்ளது.இந்நிலையில் காசா அமைதி ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், சண்டை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இஸ்ரேல் அரசு நேற்று அறிவித்தது. இஸ்ரேல் படைகளும் காசாவில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















