
டெல்லி:பிப்ரவரி 20-
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ஏற்கெனவே ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பது குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், இந்த வழக்கில் ராகுல் காந்தியின் பதவி பறிபோகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 2018ல் கர்நாடகத் தேர்தலுக்கு முன்னதாக, பெங்களூரில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி அமித்ஷா குறித்து கூறியிருந்த கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் கொடுத்த புகாரின் பேரில் சுல்தான்பூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார். இது குறித்து காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. பிரமோத் திவாரி, ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் போலியான வழக்குகளைப் புனைந்து வருவதாகக் குற்றம் சாட்டினார். சுல்தான்பூர் வழக்கும் அத்தகையது என்றார். மேலும் தங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாகவும், நீதி நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிக்க வேண்டும், அவருக்கு நிரந்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். பாரத மாதாவை விற்றுவிட்டார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார்.















