
ராவல்பிண்டி, நவ. 19- ராவல்பிண்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நடந்த முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில், பாபர் அசாம் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம், தனது கிரிக்கெட் வாழ்வில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ள ஷாஹித் அப்ரிடியின் மோசமான சாதனையை அவர் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, தனது அதிரடியான ஆட்டத்திற்காக எவ்வளவு பிரசித்தி பெற்றவரோ, அதே அளவுக்குத் தனது ‘டக் அவுட்’களுக்கும் (0 ரன் எடுத்து ஆட்டமிழப்பது) பெயர் போனவர். “ஒன்று அடித்து நொறுக்குவார் அல்லது டக் அவுட் ஆவார்” என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு டக் அவுட் ஆகி இருக்கிறார். ஆனால், பாகிஸ்தானின் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் பாபர் அசாம், அந்த மோசமான சாதனையில் அப்ரிடியையே முந்திச் சென்றுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் பாபர் அசாம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். இளம் வீரர் சயீம் அயூப் மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் ஆகியோர் தலா 10 டக் அவுட்களுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிராட் எவன்ஸ், பாபர் அசாமுக்குத் துல்லியமாகப் பொறி வைத்தார். வலது கை பேட்ஸ்மேனான பாபருக்கு, முதல் இரண்டு பந்துகளை ஆஃப்-சைடில் வெளியே ஸ்விங் செய்த எவன்ஸ், மூன்றாவது பந்தைக் கிரீஸின் வெளிப்பகுதியிலிருந்து உள்ளே ‘செல்லுமாறு வீசினார். பந்தின் திசையைக் கணிக்கத் தவறிய பாபரின் கால்கள் நகரவில்லை, பந்து நேராக அவரது பேடில் தாக்கியது. கள நடுவர் அவுட் கொடுக்க, பாபர் அசாம் உடனடியாக டி.ஆர்.எஸ் (DRS) முறையில் மேல்முறையீடு செய்தார். ஆனால், ரீப்ளேயில் பந்து விக்கெட்டைத் தாக்குவது ‘அம்பயர்ஸ் கால்’ (Umpire’s Call) என்று காட்டியதால், அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இது, கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் சந்திக்கும் மூன்றாவது டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் ஏமாற்றம் அளித்தாலும், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஃபக்கர் ஜமானின் 44 ரன்கள் மற்றும் முகமது நவாஸின் கடைசி நேர அதிரடியான 21 ரன்கள் உதவியுடன், இன்னும் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.




















