
காபூல்: நவ. 4 –
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர்; 320 பேர் காயமடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 2,200 பேர் உயிரிழந்தனர்; 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன்பிறகும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹிந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீப் அருகே, 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம், 23 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஆப்கன் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இது ஆபத்தானதாக இருக்கலாம் என்று எச்சரித்தது.
இதனால், ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. பல கட்டடங்கள் இடிந்ததில், 20 பேர் உயிரிழந்தனர்; 320 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில், 15ம் நுாற்றாண்டின் வண்ணமயமான ஓடுகளுக்கு பெயர் பெற்ற, அந்நாட்டில் எஞ்சியிருக்கும் சில சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீப்பின் புகழ்பெற்ற நீல மசூதியும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.















