
புதுடெல்லி, பிப். 19- ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அலிஷான் ஷராஃபு 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். கேப்டன் முகமது வசீம் 22, ஆர்யன்ஷ் சர்மா 13, முகமது அர்ஃபான் 11 ரன்கள் சேர்த்தனர்.தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கார்பின் போஷ் 3, அன்ரிச் நோர்க்கியா 2, ஜார்ஜ் லின்டே ஒரு விக்கெட் கைப்பற்றினர். 123 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் எய்டன் மார்க்ரம் 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், குயிண்டன் டி காக் 14 ரன்களும் எடுத்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் அந்த அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் அடுத்த சுற்றில் காலடி எடுத்து வைக்கிறது.தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி நடப்பு சாம்பியனான இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது


















