டெல்லி: ஆகஸ்ட் 23- ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயதசமி நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பலே திட்டம் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். இவர் வழக்கறிஞராகவும், பாஜக நிர்வாகியுமாக இருந்தார். இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவராக (2017-2022) இருந்தவர் ராம்நாத் கோவிந்த். நாட்டின் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த பெருமையை பெற்றவர் ராம்நாத் கோவிந்த்.ஆர்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி இந்நிலையில் தங்களின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ராம்நாத் கோவிந்தை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 வருடங்களாகிவிட்டன. இதையடுத்து அந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஆர்எஸ்எஸ் அமைப்பு விஜயதசமி பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாடும். அந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவருடன், ஒரு முக்கிய பிரமுகரை சிறப்பு விருந்தினராக அழைக்கும். கடந்த காலங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விஜய தசமி நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறது என்பது அரசியல் களத்தில் கவனிக்கப்படும். சிறப்பு விருந்தினராக ராம்நாத் கோவிந்த் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை 7.40 மணியளவில் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா நடைபெறும். இதில் நம் இயக்க தலைவர் மோகன் பகவத் உரையாற்றுவார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்”என்று கூறியுள்ளனர்.
















