ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற இருவரும் பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபலமான சுற்றுலா தலமான பாண்டை கடற்கரை, அந்நாட்டின் முக்கிய நகரமான சிட்னிக்கு அருகில் உள்ளது. நேற்று விடுமுறை தினம் மற்றும் யூத மதத்தினரின் முக்கிய பண்டிகையான ஹனுக்கா எனப்படும் ஒளியை கொண்டாடும் விழாவின் முதல் நாள் என்பதால், கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி, பயங்கரவாதிகள் இரண்டு பேர் கண்மூடித்தனமாக சுடத் துவங்கினர். இரு பயங்கரவாதிகளும் 10 நிமிடங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட முறை சுட்டனர். இதில் பொது மக்களில், 16 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், பயங்கரவாதிகளை நோக்கி போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் சுட்டு பிடிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தந்தை பெயர் சஜித் அக்ரம் 50, மகன் பெயர் நவீத் அக்ரம் 24,என அடையாளம் காணப்பட்டனர். போலீஸ் சுட்டதில் தந்தை உயிரிழந்த நிலையில் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தந்தை ஆஸ்திரேலியாவில் பழக்கடை நடத்தி இருக்கிறார். இருவரும் பாகிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், எதற்கு தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்தியா குற்றச்சாட்டு மீண்டும் உறுதி
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் தாயகமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பயங்கரவாத சம்பவங்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. இதற்கு அந்த நாட்டு அரசும், ராணுவமும் நேரடியாக பயங்கரவாத அமைப்புகளுக்கு அளிக்கும் ஆதரவே முக்கிய காரணம் என்றும் இந்தியா தொடர்ந்து பல்வேறு சர்வதேச அமைப்புகளில் குற்றம் சாட்டி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.