ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அடி.. இந்தியா தொடரிலிருந்து கேப்டன் கம்மின்ஸ் விலகல்

சிட்னி, செப்டம்பர் 2- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனான பேட் கம்மின்ஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, பேட் கம்மின்ஸுக்கு முதுகில் வலி இருந்துள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகக் கருதப்பட்ட இந்த வலி, எதிர்பார்த்ததை விட நீண்ட நாட்கள் நீடித்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், அவரது கீழ் முதுகுப் பகுதியில் ‘லம்பார் எலும்பு அழுத்தம்’ (lumbar bone stress) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எலும்பு முறிவுக்கு முந்தைய நிலை என்பதால், உடனடியாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம். கவலைக்குள்ளாக்கும் காயம்! கம்மின்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், இதே போன்ற எலும்பு முறிவு காயங்களால் அவர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். 2011-ல் அறிமுகமான அவர், தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட 2017 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாகக் காயங்கள் இன்றி மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில், 2025-ல் அவரது பந்துவீச்சுப் பளு குறைவாக இருந்தபோதும், அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டிருப்பது அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸ் தொடரில் பங்கேற்பாரா? இந்தக் காயம் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார். நவம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு முன்பாக, அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் நேரடியாகக் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கம்மின்ஸ் காயத்தில் இருந்து மீண்டு தனது மறுவாழ்வுப் பயிற்சியைத் தொடர்வார் என்றும், பந்துவீச்சுக்குத் திரும்புவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.