
சென்னை: ஜூலை 3-
‘தமிழகத்தில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது’ என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில், கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களைத்தான் தவெக அரசு பெற்றிருந்தது. 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தனக்கான ஆதரவை அதிகமாகப் பெறுவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டது. இதில் முதல்வர் விஜய்யே நேரடியாகச் சென்று அதிமுக எம்எல்ஏக்களைச் சந்தித்து குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பிறகு அதிமுக கொறடாவை மீறி 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதில் 21 பேர் தங்கள் நிலைக்கு வருந்தி மன்னிப்பு கடிதம் அளித்தனர். 4 பேர் கடிதம்கொடுக்காமல், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
எந்த காரணத்துக்காக அவர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்று பேரவைத் தலைவர் விசாரித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர்களின் ராஜினாமாவை ஏற்றது தவறு.இனிமேல் தவறு செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்ட சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்தை ஏமாற்றும் செயல். இதன்மூலம் தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாகும். அங்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்டம். அங்கு இடைத்தேர்தல் நடந்தால் கட்சி தாவிய 6 பேரும் அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கி விட்டு போட்டியிட வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் தவெக தனது வேட்பாளரை நிறுத்தும்.தமிழகத்தில் 6 தொகுதிகளில் ஏற்பட்ட காலியிடம், சந்தேகத்துக்கிடமான வகையில் ஏற்பட்ட காலியிடமாகும்.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கை தொடர்ந்தோம். இதுபோன்ற சில வழக்குகளில் வழக்கு நிலுவையில் இருந்தால் தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதன்படி அங்கு தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம். மேலும், தங்கள் சுயலாபத்துக்காக கட்சி தாவலில் ஈடுபடும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


















