இது என்ன ‘சரக்கு’ பார்ட்டியா? இங்கிலாந்து வீரர்கள் மீது பாய்ந்த விசாரணை

மெல்போர்ன்:டிசம்பர் 23-
ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மீது சரமாரியான புகார்கள் எழுந்துள்ளன. ஆஷஸ் தொடரை 3-0 எனப் பறிகொடுத்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் வீரர்கள் மது போதையில் கும்மாளம் போட்டதாக வந்த தகவலால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொந்தளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி படுமோசமாக விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று, தொடரை இழந்துவிட்டது. வெறும் 11 போட்டி நாட்களில் மூன்று டெஸ்ட் போட்டிகளும் முடிந்து, அதில் தோற்று விட்டதுதான் இதில் உச்சகட்ட சோகம். ஓய்வு நேரத்தில் ஓவர் ஆட்டம்? மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், இங்கிலாந்து வீரர்கள் ‘நுசா’ என்ற இடத்திற்கு ஓய்வுக்காகச் சென்றிருந்தனர். ஆனால், அங்கே வீரர்கள் நடந்து கொண்ட விதம் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அது ஒரு கிரிக்கெட் அணியின் ஓய்வு நேரம் போல இல்லாமல், ஏதோ ‘பேச்சிலர்ஸ் பார்ட்டி’ போல இருந்தது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கட்டுப்பாடில்லாமல் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்து மானம் போயிருக்கும் நிலையில், இந்த ‘குடி’ விவகாரம் இங்கிலாந்து நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராப் கீ உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இது குறித்துப் பேசிய ராப் கீ, “வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து சற்று விலகி ஓய்வெடுப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இரவு உணவின் போது ஒரு கிளாஸ் வைன் குடிப்பதற்கும், அடுத்த நாள் பயிற்சி செய்ய முடியாத அளவுக்குக் குடித்துவிட்டு ஆடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எல்லை மீறினால் நடவடிக்கை பாயும்” என்று எச்சரித்துள்ளார். கேப்டன் ஸ்டோக்ஸ் மீது பாயும் விமர்சனம் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணியின் ‘பாஸ்பால்’ கலாச்சாரம் ஏற்கனவே தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீரர்களின் ஒழுக்கமும் கேள்விக்குறியாகி உள்ளதால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.என்ற கேள்வி எழுந்துள்ளது.