
புதுடெல்லி: ஜூலை 17-
நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில்களை இயக்கும் உலகின் மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் இணைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வரும் நிலையில், வந்தே பாரத் போன்ற ரயில்களின் வரிசையில் தற்போது இந்தச் சுற்றுசூழல் நட்பு ஹைட்ரஜன் ரயிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் பசுமை ஆற்றல் மற்றும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைய பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையே ஏற்படும் வேதிவினை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டில் ரயிலில் இருந்து நச்சுப் புகைக்குப் பதிலாக வெறும் நீராவி மட்டுமே கழிவாக வெளியேறுவதால், இது டீசல் ரயில்களை விட சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. ரயிலுக்குத் தேவையான ஹைட்ரஜனை அதிஉயர் அழுத்தத்தில் சேமித்து வைப்பதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும் ஜிந்த் பகுதியில் பிரத்தியேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிக்காக ஹைட்ரஜன் கசிவைக் கண்டறியும் அதிநவீன கருவிகள் மற்றும் தீ விபத்து எச்சரிக்கை சென்சார்கள் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன.
ரயிலைப் பராமரிப்பதற்காக டெல்லியின் ஷகுர்பஸ்தி பகுதியில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த எரிபொருள் நிரப்பும் தளம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமே தற்போது இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த மைல்கல் சாதனை ரயில்வே துறையின் எதிர்காலப் போக்கையே மாற்றியமைக்கும் என நம்பப்படுகிறது.













