
டெல்லி, ஜூன் 3- தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று (ஜூன் 2, 2026) டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறும் நோக்கில் விரிவான மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் அளித்தார். தமிழகத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், தொழில்துறை வளர்ச்சி மற்றும் சரக்குப் போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு பல முக்கிய கோரிக்கைகளை ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ளார். கோவை எல்&டி பைபாஸ் மற்றும் கோவை-திருச்சி சாலைத் திட்டங்கள் ஏற்கனவே ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் கோரியுள்ளார். ஏற்கனவே உள்ள திட்டங்கள் கோவை எல்&டி பைபாஸ் (நீலாம்பூர் – மதுக்கரை) மற்றும் கோவை – திருச்சி ஆகிய வழித்தடங்களை 6 வழிச்சாலைகளாக மேம்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே ஒப்புதல் பெற்று, அதற்கான பணிகள் தற்போதே வெவ்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடனான சந்திப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஏற்கனவே நடக்கும் இந்த இரு திட்டங்களின் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.


















