
நாக்பூர்: ‘அக். 3-
’இலங்கை, வங்கதேசம், அதை தொடர்ந்து நேபாளம் என அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது சரியாகப்படவில்லை. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது; அராஜகம் மட்டுமே விளையும்,’’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளை போல, இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நிறுவப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின் போது, நிறுவன நாளை அந்த சங்கம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு நுாற்றாண்டு என்பதால், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் களைகட்டி இருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் உரை இடம்பெறும். அந்த வகையில், இந்த ஆண்டு அதன் தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாடு, பிற நாடுகளுடன் நட்பாக இருக்க வேண்டும். அதே வேளையில் தேச பாதுகாப்பு என வந்துவிட்டால், அதற்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஒவ்வொரு கணமும் கவனமாகவும், கண்காணிப்புடனும், வலுவாகவும் இருக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின், நம் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட நாடு எது; நட்பு பாராட்டும் நாடு எது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், மதத்தை கேட்டு, 26 இந்தியர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மிகுந்த மனவலியை தந்தது. இந்த தாக்குதலுக்கு நம் அரசு தக்க பதிலடியை கொடுத்துவிட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் நம் ராணுவத்தின் வீரமும், சமூகத்தின் ஒற்றுமையும் வெளிப்படையாகவே தென்பட்டது.
கவனம் தேவை
அண்டை நாடுகளில் அசாதாரணமான சூழல் நிலவுவது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம், சமீபத்தில் நேபாளம் என நம் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை அனைத்தும் மக்களின் ஆவேசத்தால் நடந்தவை.
இந்தியாவிலும் அப்படியொரு அசம்பாவிதத்தை நிகழ்த்த, நம் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் முயன்று வருகின்றன. வன்முறை எழுச்சியால் எதையும் சாதிக்க முடியாது. அராஜகத்தில் தான் முடிவடையும். அசாதாரண சூழல், வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும். இதனால், நாமும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தலைவர்கள் மக்களிடம் இருந்து விலகிச் செல்வது அதிருப்தியை வளர்த்து விடும். வங்கதேசத்திலும், நேபாளத்திலும் நிகழ்ந்த சம்பவங்களால் யாருக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை. வன்முறை எழுச்சிகளால் மாற்றம் ஏற்படாது. அப்படி மாற்றம் ஏற்பட்டால், அது அராஜகத்தின் இலக்கணமாகிவிடும் என டாக்டர் அம்பேத்கர் தெரிவித்து இருக்கிறார். முற்போக்கான நாடுகள், ஒழுக்கமான வழிமுறைகள் வாயிலாக இலக்கை அடைய தவறும்போது, அதன் சொந்த பலம் ஓரம்கட்டப்படுகிறது. அண்டை நாடுகளில் குறிப்பாக நேபாளத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிப்பது, உள்நாட்டு பாதுகாப்பை கடந்து இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.















