
சென்னை, பிப் 25- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2 பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் இதே பிரிவில் உள்ள இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5.350 நிகர ரன் ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிக அளவிலான நிகர ரன்ரேட்டை கொண்டுள்ளதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதுமானதாக உள்ளது.மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை (26-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் மார்ச் 1-ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணிக்கு எதிராக பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்க அணி 3.800 நிகர ரன் ரேட்டுடன் 2 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் அதிக அளவிலான ரன் ரேட் வித்தியாசங்களுடன் வெற்றி பெற வேண்டும். மேலும் தென் ஆப்பிரிக்க அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இது நிகழ்ந்தால் அந்த அணி 6 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றில் நுழையும். முக்கியமாக அந்த அணி மேற்கு இந்தியத் தீவுகளை பெரிய அளவிலான வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.இது நிகழ்ந்தால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு திறக்கும்.


















