
புதுடெல்லி, பிப். 19 டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது ஏஐ கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா ஏஐ உச்சி மாநாடு 2026 டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 110-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் 30 சர்வதேச அமைப்புகள் பங்கேற்கின்றன. இதில் சுமார் 20 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 45 அமைச்சர்கள் கலந்து கொள்வது, ஏஐ தொழில் நுட்பத்தின் பொறுப்பான வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்த்துகிறது.இந்த ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். இந்த மாநாட்டில் வரும் 20ம் தேதி அவர் உரையாற்ற உள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சங்களை பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்தடைந்த சுந்தர் பிச்சை, தனக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில்,”ஏஐ உச்சி மாநாட்டுக்காக மீண்டும் இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் போல ஒரு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உச்சி மாநாட்டின் ஆய்வறிக்கைகளும் மிகச் சிறப்பாக இருந்தன” எனப் பதிவிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ”சுந்தர் பிச்சையுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்தியாவின் ஏஐ கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து அவருடன் விவாதிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் திறமையான மாணவர்கள் மற்றும் இளம் நிபுணர்களுடன் கூகுள் நிறுவனம் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.















