புதுடெல்லி: ஆக. 18-
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக (INDIA Bloc VP Candidate) யார் இருப்பார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. இதற்கான பதில் இன்று கிடைக்கும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர் குறித்து இன்று ஆலோசிக்கிறார்கள்.
கடந்த மாதம் இறுதியில் துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கொடுத்தார். உடல்நிலை காரணமாகவே ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குடியரசுத் தலைவர் முர்முவும் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக அறிவித்தார்.
இதையடுத்து துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி துணை குடியரசுத் தலைவர் பதவியாக இருந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேர்தல் நடத்த வேண்டும். துணை குடியரசுத் தலைவர் தான் ராஜ்யசபாவையும் வழிநடத்துவார். இதனால் முக்கியமான பதவியாகத் துணை குடியரசுத் தலைவர் பதவி இருக்கிறது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசித் தேதியாகும். ஆளும் தரப்பு ஏற்கனவே சி.பி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் யாரை வேட்பாளராக அறிவிக்கப்போகிறது என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்ய இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று காலை கூடி விவாதிக்க உள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கிறது. இதில் பல்வேறு விஷயங்களையும் எதிர்க்கட்சிகள் கலந்தாலோசிக்கவுள்ளது. அதேநேரம் வேட்புமனு தாக்கல் செய்ய ஓரிரு நாட்களே இருப்பதால் இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. பாஜக வேட்பாளர் முன்னதாக நேற்றைய தினம் நாட்டின் இரண்டாவது உயரிய அரசியலமைப்பு பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவித்தது. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர்.! தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். . நீண்ட காலம் அரசியல் அனுபவம் கொண்டவர்.. இதை எல்லாம் கணக்கில் வைத்தே ராதாகிருஷ்ணனை வேட்பாளராக என்டிஏ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.













