இந்தியா தாக்குதலில் பாகிஸ்தான் இழந்தது என்ன?

டெல்லி: மே 26 – நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 7 ம் தேதி அதிகாலை முதல் 10 ம் தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 87 மணிநேரம் தீவிரமாக சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தானை நம் நாடு பந்தாடியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 87 மணிநேர சண்டையில் இருநாடுகளுக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு நம் நாடும் பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் கடந்த 7 ம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நம் நாடு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான மோதல் என்பது அதிகரித்தது. பாகிஸ்தான் நம் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு நம் நாடு நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள்,ரேடார் அமைப்புகள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இருநாடுகள் இடையே 10ம் தேதி வரை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானால் நம்மை ஒன்று செய்யவில்லை. மாறாக நம் நாட்டின் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது.