
விசாகப்பட்டினம், டிச. 6- இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி இன்று (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளதால், கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி ஆறுதல் தேடுமா? அல்லது தென்னாப்பிரிக்கா இரட்டை வெற்றியை ருசிக்குமா? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக இது மாறி உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ (ACA-VDCA) கிரிக்கெட் மைதானம், ராய்ப்பூர் மைதானத்தைப் போலவே பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய இரண்டு போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது போல, இன்றும் ஒரு அதிக ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்த முடியும்.
இந்தத் தொடர் முழுவதுமே பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது பனிப்பொழிவு தான். விசாகப்பட்டினத்திலும் முன்னிரவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டாஸ் முக்கியம் இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வெற்றி – தோல்வியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக இருக்கும். பனிப்பொழிவு காரணமாக,
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும். பந்து கைநழுவும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்த்தை பராமரிக்கத் திணறுவார்கள். குறிப்பாக, 34 முதல் 50 ஓவர்கள் வரை ஒரே பந்தை பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதி, பனிப்பொழிவுடன் சேரும்போது சேஸிங் செய்யும் அணிக்குச் சாதகமாக மாறிவிடுகிறது.




















