வாஷிங்டன்: நவம்பர் 7-
“இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவர்களிடம், ‘சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை’ என்று தெரிவித்தேன். அதன் பிறகே அவர்கள் போரை நிறுத்தினர்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவம் டிரோன்களைக் கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியா முறியடித்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. இதையடுத்து, பேச்சுவார்த்தையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து மீண்டும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த மோதலில்தான், தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கிடையே ஏற்படவிருந்த பெரும் போரைத் தடுத்ததாக டிரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

















