இந்தியா மீதான கூடுதல் வரிக்கு அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு

வாஷிங்டன், ஆகஸ்ட் 29- இந்தியாவை மட்டுமே குறி வைத்து கூடுதல் வரி விதிப்பது, இருநாட்டு உறவுகளை பாதிப்பது மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் காயப்படுத்தி வருவதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, 25 சதவீதம் என, இந்தியா மீது, 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது.அதிபரின் முடிவுக்கு அந்த நாட்டின் பல பொருளாதார, வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,
அமெரிக்க பார்லிமென்டின், வெளியுறவுக் கொள்கைக்கான குழுவின் கூட்டம் நடந்தது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிபரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் இது தொடர்பாக சில எம்.பி.,க்கள் பதிவிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா மீது இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதித்து உள்ளது முறையல்ல. இது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுகளை நாசப்படுத்துகின்றன. மேலும் அமெரிக்கர்களை காயப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.