
அகமதாபாத்: பிப். .23-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. குயிண்டன் டி காக் 6 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியாவிடம் எளிதாக கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ரியான் ரிக்கெல்டன் 7 ரன்கள் எடுத்த நிலையில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஷிவம் துபேவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியை சந்தித்தது. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியியின் பந்துவீச்சு துறைக்கு நெருக்கடியை கடத்தியது. வருண் சக்ரவர்த்தி வீசிய 5-வது ஓவரில் டேவிட் மில்லர் 2 பவுண்டரிகள் விரட்ட 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.




















