Home செய்திகள் உலக செய்திகள் இந்திய தேர்தல் மாடல் மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது ஏன்?

இந்திய தேர்தல் மாடல் மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது ஏன்?

வாஷிங்டன், ஆகஸ்ட் 20- “‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத் தேர்தலில் 6.46 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். அதில் 1%-க்கும் குறைவானவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது அங்கு தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் இருந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு கட்டாய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அதற்கு நாம் உடனடியாக ‘சேவ் அமெரிக்கா’ சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ட்ரம்ப் விரும்பும் மாற்றம் என்ன? ‘அமெரிக்க வாக்காளர் தகுதி பாதுகாப்பு’ (SAVE) சட்டத்தை காங்கிரஸில் நிறைவேற்ற ட்ரம்ப் முயற்சி செய்துவரும் வேளையில், அவருடைய இந்திய ஒப்பீட்டுக் கருத்துகள் வந்து கவனம் பெற்றுள்ளன. இந்தச் சட்டத்தின் மூலம் மாகாண தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு மற்றும் அடையாள விதிமுறைகளை மாற்றுவதை ட்ரம்ப் விரும்புகிறார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் இனி மாகாண தேர்தல்களில் வாக்களிக்கும்போது மக்கள் தங்களின் அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணத்தைக் காட்ட வேண்டியிருக்கும். மேலும், புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தையும் காட்ட வேண்டியிருக்கும். நேரடியாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வாக்களிக்காமல் தபால் ஓட்டு மூலம் வாக்களிப்போரும், அதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதும், வாக்களிக்கும்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். தபால் வாக்குகளை அனுமதிப்பதிலும் கடுமையான கெடுபிடிகளை விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேர்தல் முறையில் வாக்குச்சாவடிகளில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர்களுக்கு பல அங்கீகரிக்கப்பட்ட வழிகள் உள்ளன. இந்தியாவின் பெரிய வாக்காளர் எண்ணிக்கையையும், தபால் வாக்கு பயன்பாடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, அமெரிக்கா கடுமையான அடையாள அட்டை விதிமுறைகளை கொண்டு வந்தாலும், பெரிய அளவில் தேர்தலை நடத்த முடியும் என்று ட்ரம்ப் நம்புகிறார்.