Home மாவட்டங்கள் பெங்களூர் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: ஆக. 18:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம் செய்யப்பட்டது.
மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 15-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4,385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடிநீருக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 44.701 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.